புத்திசாலிகள் காதலிக்கிறார்கள், முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக நேற்று முன்தினம் (ஜன.17) அறிவித்திருந்தனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் நேற்று முழுவதும் பேசுபொருளானது.
இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களை எச்சரிப்பதற்கான நல்ல ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கின்றன. திருமணத்தை விட எதுவும் காதலை விரைவாகக் கொல்வதில்லை. காதல் நீடித்திருக்கும் வரை காதலிப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியம். அதன்பிறகு திருமணம் என்னும் சிறைக்குள் சிக்காமல் கடந்து போய்விட வேண்டும்.
திருமணத்தில் உள்ள காதல், அவர்கள் அந்தக் காதலைக் கொண்டாடும் நாட்களை விடக் குறைந்த நாட்களே நீடிக்கும். அதாவது 3 முதல் 5 நாட்கள் மட்டுமே. புத்திசாலிகள் காதலிக்கிறார்கள். முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
விவாகரத்துகள்தான் விஷேச நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட வேண்டும். காரணம் அதில் இருக்கும் விடுதலை. இருவரது ஆபத்தான குணாதிசயங்களைப் பரிசோதிப்பதால திருமணங்கள் மிகவும் அமைதியாக நடத்தப்பட வேண்டும்.
மகிழ்ச்சியின்மை மற்றும் சோகம் ஆகியவற்றின் தொடர்ச்சியை அறிவிப்பதில் நம்முடைய மோசமான முன்னோர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட மிகவும் மோசமான சடங்குதான் திருமணம்”.
இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.