கரோனா காரணமாக குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை: டெல்லியில் ட்ரோன்கள், பாரா கிளைடர்கள் பறக்க தடை
கரோனா பரவல் காரணமாக வரும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை.
நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் வெளிநாட்டு தலைவர் கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அவர் விழாவில் பங்கேற்கவில்லை.
வரும் குடியரசு தின விழாவில்மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தானைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகபங்கேற்பார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தற்போது நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே வரும் குடியரசு தின விழாவில் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி குடியரசு தின விழாவில் சுமார் 1.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஆக குறைக்கப்பட்டது. வரும் குடியரசு தின விழாவில் சுமார் 24,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில் 19,000 பேருக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு அழைப்பு விடுக்கப்படும் என்றும் 6,000 பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பார்வையாளர்களில் சமுதாயத் தின் அனைத்து தரப்பு மக்களும் இடம்பெறுவார்கள். குறிப்பாக சுகாதார, முன்கள பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கட்டு மான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. சுமார் 600 கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் ஆளில்லா சிறிய விமானமான ட்ரோன்கள், சூடான வாயு நிரப்பப்பட்ட பெரிய பலூன்கள், பாரா கிளைடர்கள், ரிமோட் மூலம் இயக்கக் கூடிய சிறிய ரக விமானங்கள் உள்ளிட்டவைகள் வரும் 20-ம் தேதி முதல் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.