”உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி தொடரும் ,” என , முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.சிவகாசியில் அவர் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ., சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி தொடரும். சிவகாசி மேயர் பதவியை பா.ஜ.,விற்கு வழங்க வலியுறுத்துவோம். பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்கள், இறப்புகளால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் மட்டுமல்ல முதலாளிகளும் தான். எனவே பாதுகாப்புக்கான திட்டங்கள் தீட்டப்படும்.
பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க கூட முடியாது.கொரோனா தடுப்புவிதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும். பிரதமர் மோடியின் முயற்சியால் 150 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கேட்டதற்கும் அதிகமான தடுப்பூசிகளை பிரதமர் வழங்கி உள்ளார். இதை முறையாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.பொய்யான வாக்குறுதி:தேர்தலுக்காக தி.மு.க., வின் முதல் மூலதனமே பொய்யான வாக்குறுதி மட்டுமே.
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவர். அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கலுக்காக மக்களுக்கு ரூ. 2500 வழங்கினர். ஆனால் தி.மு.க., அரசு ஏமாற்றி விட்டது.
இலவசம் கொடுத்து கேவலமாக மாற்றிவிட்டார்கள்.இதுவரை வந்த கருத்து கணிப்பின் படி உ.பி., சிக்கிம் உட்பட 5 மாநிலங்களிலும் பா.ஜ., அமோக வெற்றி பெறும். குடியரசு தின விழாவில் தமிழகத்தின் ஊர்தி போனால் அது தமிழகத்திற்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே கவுரவம் தான். ஆனால் ஊர்தி எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படியே அனுமதி வழங்கப்படும், என்றார்.