இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் வந்த 173 விமான பயணிகளுக்கு கோவிட் தொற்று இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
பயணிகள் பலரும் அதனை தவறான முடிவு என குற்றம்சாட்டியதால் ஆய்வகம் மீது விமான நிலைய ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமிர்த்சர் ஸ்ரீ குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளியன்று இத்தாலியின் ரோம் நகரிலிருந்து பயணிகள் வந்தனர். அவர்கள் பயணத்திற்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து நெகடிவ் என சான்று வைத்திருந்தனர். அம்ரித்சர் வந்திறங்கியது விமான நிலைய ஆணையம் பரிசோதனை நடத்தியது.
அதனை டில்லியிலுள்ள ஆய்வகம் மூலம் மேற்கொண்டுள்ளனர். அதில் 173 பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தது. இதனால் பயணிகள் விமான நிலையத்தில் பிரச்னையில் ஈடுபட்டனர். மறுபரிசோதனை செய்ததில் பலருக்கு கோவிட் இல்லை என முடிவு வந்தது.
இதே போன்று வியாழனன்றும் இத்தாலியிலின் மிலன் நகரிலிருந்து அம்ரித்சர் வந்த 125 விமான பயணிகளுக்கு கோவிட் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. குளறுபடியான முடிவுகளால் விமான நிலைய ஆணையம் டில்லி ஆய்வகத்துக்கு வழங்கிய பணிகளை நிறுத்தியது. உள்ளூர் ஆய்வகத்திடம் பரிசோதனை பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆய்வகம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.