”ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து, வரும் 31ம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசித்து முதல்வர் அறிவிப்பார்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்தா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், ‘டேட்டா செல்’ என்ற தரகு அலகு அமைக்கப்பட்டு உள்ளது.அதை துவக்கி வைத்த பின், அமைச்சர் அளித்த பேட்டி: கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது, ஓமியோபதி, சித்தா, யுனானி போன்ற மருத்துவத்தால் மக்கள் பயன் பெற்றனர். அதேபோல, ‘ஒமைக்ரான்’ பரவி வரும் நிலையில், அதற்கும் சித்த மருத்துவத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தமிழகத்தில், 77 இடங்களில் இந்திய மருத்துவம் சார்பில், கொரோனா கண்காணிப்பு மையம் துவக்கப்பட்டது. இந்திய மருத்துவத்திற்காக நிரந்தரமாக, 1,700 படுக்கைகள் உருவாக்கப்பட்டன.
6,700 படுக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டன. தற்போது, அவற்றை மீண்டும் தயார் நிலையில் வைக்க, ‘டேட்டா செல்’ மையம் துவக்கி இருக்கிறோம்.தமிழகத்தில் சித்தா பல்கலை புதிதாக துவக்க இருக்கிறோம். அதற்கான ஆயத்த பணிகளுக்கு, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில், சித்தா மருத்துவமனை வளாகத்தில் பல்கலையை, முதல்வர் துவக்கி வைக்க இருக்கிறார்.
பல்கலை கட்டடம், மாதவரம் பகுதியில் 19.6 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 97 பேருக்கு ‘எஸ் ஜீன்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் குணமடைந்துள்ள நிலையில், 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில், ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய முடியும்.
பாதிப்பை கண்டறிந்து, அதை அறிவிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் பெங்களூரு, புனே ஆய்வு மையங்களுக்கு அனுப்பி தான் உறுதி செய்ய முடிகிறது. அங்கிருந்து முடிவுகள் வர தாமதமாவதால், அதற்குள் சிகிச்சை பெறுபவர்கள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இது குறித்து மத்திய குழுவிடம் ஆலோசிக்க உள்ளோம்.
தமிழகத்தில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி போடப்படும். ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி, மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கிய பின் போடப்படும்.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வரும் 31ம் தேதி மருத்துவ வல்லுனர் குழுவினருடனான ஆலோசனைக்கு பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பார்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.சமுதாய தொற்றாக மாறும்?மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, பாதிப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்னும், டெல்டா வகை வைரஸ் குறையவில்லை. அதேபோல ஒமைக்ரான், சமுதாய தொற்றாக மாற சாத்தியக்கூறு இருப்பதால், மக்கள் முக கவசம் அணிவதுடன், தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.