இலங்கையில் உள்ள ரத்தனாபுரம் என்கிற இடத்தில் அதிக அளவிலான விலை உயர்ந்த இரத்தின கற்கள் கிடைத்து வருகின்றன.
பொதுவாக பழமையான பொருட்களுக்கு எப்போதும் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும். நமது வீடுகளில் இருக்கக்கூடிய பழமையான பொருட்களுக்கு கூட அதிக மதிப்பு இருக்க வாய்ப்புண்டு. சில நேரங்களில் வீடு கட்டும்போது பூமிக்கு அடியில் தோண்டினால், விலை உயர்ந்த தங்க புதையல்கள் அல்லது பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்படும். எப்போதாவது ஒரு முறை தான் இது போன்ற புதையல் நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இலங்கையில் உள்ள ரத்தனாபுரம் என்கிற இடத்தில் அதிக அளவிலான விலை உயர்ந்த இரத்தின கற்கள் கிடைத்து வருகின்றன. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரத்தனாபுரம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான விலை உயர்ந்த இரத்தின கற்கள் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு மிக பெரிய நீல நிற இரத்தின கல் ஒன்று அங்கு கிடைத்தது. பின்னர் இதை பற்றி ஆய்வு குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அந்த நீலக் கல்லை ஆராய்ந்து பார்த்துவிட்டு இது தான் உலகிலேயே மிக பெரிய நீல இரத்தின கல் என்று அறிவித்தனர். தேசிய ரத்தின கற்கள் மற்றும் ஆபரண ஆணையம் என்கிற அரசு நடத்தும் நிறுவனமானது இந்த விலை உயர்ந்த நீல ரத்தினக் கல்லிற்கு சான்றளித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் சர்வதேச சந்தையில் இந்த நீலக்கல்லை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த இரத்தின கல்லை கொண்டு இன்னும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.
இந்த பெரிய நீல கல்லிற்குள் இன்னும் சில தூய்மையான கற்கள் இருக்கக்கூடும், ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு தூய்மையான கற்களை வெளியில் இருந்து பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார். இந்த இரத்தின கல்லை இன்னும் சர்வதேச ரத்தின நிறுவனங்கள் சான்றளிக்கவில்லை. மேலும் இந்த நீலக் கல்லின் சிறப்பம்சமாக இதில் உள்ள அலுமினியம் ஆக்ஸைடு, டைட்டானியம், இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றை இரத்தின கல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விலை உயர்ந்த நீல இரத்தின கல்லிற்கு ‘குயின் ஆஃப் ஏசியா’ (ஆசியாவின் ராணி) என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த கல் சுமார் 310 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பை ஆய்வு செய்தபோது மிக அதிக விலைக்கு இது போகும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் இந்த இரத்தின கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதே ரத்தனாபுரம் நகரில் தான் கடந்த ஜுலையில் உலகிலேயே மிக பெரிய நட்சத்திர வடிவ இரத்தின கல்லை கண்டெடுத்தனர்.
எதர்ச்சையாக தண்ணீருக்காக அந்த இடத்தில தோண்டிய போது இந்த விலை உயர்ந்த நட்சத்திர கல் கிடைத்தது. அந்த கல்லின் எடை சுமார் 510 கிலோ இருந்தது. அதற்கு ‘செரென்டிபிட்டி சபையர்’ (அதிர்ஷ்ட்ட இரத்தின கல்) என்று பெயர் வைத்தனர்.