ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட பகுதியில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குன்னூர் காட்டேரி பூங்கா அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிர்இழந்தனர். விபத்து நடந்த நஞ்சப்பசத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில், விமானப்படை தளபதிஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரிநேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காலை 8 மணிக்கு காட்டேரி பூங்கா அருகே வந்த அவரை, விமானப்படை வீரர்கள், ராணுவத்தினர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரத்துக்கு அழைத்துச் சென்றனர். ஹெலிகாப்டர் விழுந்து கிடந்தஇடத்தை ஏர் சீஃப் மார்ஷலிடம் காட்டிய வீரர்கள், ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் கிடந்த இடங்கள்,உடல்கள் கிடந்த இடம் ஆகியவற்றையும் காட்டினர்.
அங்கு ஆய்வு செய்த ஏர் சீஃப்மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் எங்கெங்கு சிதறி உள்ளன,கருப்புப் பெட்டி எங்கு உள்ளதுஎன்பது போன்றவற்றை கண்டறிய தேடுதல் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்துஅங்கிருந்த ராணுவ உயரதிகாரிகளிடம் விபத்து தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதை நஞ்சப்பசத்திரம் குடியிருப்புப் பகுதியில்வசிக்கும் சிலரும், அருகேயுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வந்த சில தொழிலாளர்களும் நேரில் பார்த்துள்ளனர். சிலர் சத்தம் கேட்ட பின்னர் வந்து பார்த்துள்ளனர். அவர்களை ராணுவத்தினரும், காவல்துறையினரும் அடையாளம் கண்டு,பெயர், விவரங்களை சேகரித்து வைத்து இருந்தனர். இவர்களிடம் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரிநேற்று விசாரணை நடத்தினார். விபத்து ஏற்பட்டது எப்படி? சம்பவத்தின்போது என்ன நடந்ததுஎன்பன போன்ற விவரங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.