இந்தியா

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது

123views

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை அவர்களது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பிபின் ராவத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. பின்னர் டெல்லி கண்டோன்மெண்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் மரணம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டதாகவும், தாய்நாட்டிற்காக அவர் நாற்பது ஆண்டு காலம் தன்னலமற்ற சேவையாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கடமையை செய்யும் போது உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் சக குடிமகன்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்துவதாகவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்துள்ளதால் மிகவும் வேதனயடைந்துள்ளதாகவும், அவர்கள் சிரத்தையுடன் தேசத்திற்கு சேவையாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர், உண்மையான தேசபக்தர் என புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பிபின் ராவத் பெரிதும் பங்களித்ததாகவும் கூறியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!