விரைவில் ராணுவத்திடம் ஒப்படைப்பு; ட்ரோன் அழிப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் எல்லை பாதுகாப்புப் படையினரின் 57-வது எழுச்சி தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
எல்லை பாதுகாப்புப் படை 1965-ம் ஆண்டு உருவாக்கப்பட் டது. அதிலிருந்து ஒரு முறைகூட எல்லையில் எழுச்சி தின விழா கொண்டாடப்படவில்லை. இப்போது முதல் முறையாக எல்லையில் எழுச்சி தின விழா கொண்டாடப்படுகிறது. எல்லை பாதுகாப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது முதல் பாதுகாப்புப் படையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, எல்லையில் பணி புரியும் வீரர்களுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியாகவளர்ச்சியடைய வேண்டும் எனில்அதன் எல்லைகள் வலுவாக இருக்க வேண்டும். பாதுகாப்பானசூழல் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியமாகும்.
சமீப காலமாக எல்லையில் ட்ரோன்கள் மூலமான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் எல்லைபாதுகாப்புப் படை, மத்திய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆர்டிஓ), தேசியபாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) ஆகியன ஒன்றிணைந்து ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இது விரைவில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். சுய சார்பு தொழில்நுட்பத்தில் மிகச் சிறப்பான கருவிகளை நமது விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.