இந்தியா

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்: மேகாலயாவில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்கிறார்கள்

73views

மேகாலயாவில் நேற்று நள்ளிரவு திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்தனர்.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.

கிழக்கு காசி மலைமாவட்டத்தின் மாவ்ஸ்ராம் தொகுதி எம்எல்ஏ ஷாங்பிளாங் கூறுகையில் ‘ காங்கிரஸ் கட்சியில் உள்ள 17 எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளோம்.

முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 11 எம்எல்ஏக்களும் நாளை திரிணமூல் காங்கிரஸில் முறைப்படி சேர்வோம். இது தொடர்பாக எங்களின் முடிவை பேரவைசபாநாயகர் மேதாப் லிங்டோவிடம் தெரிவித்துவிட்டோம்’ எனத் தெரிவித்தார்.

2023ம் ஆண்டுதான் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் போது காங்கிரஸ்க ட்சியிலிருந்து 17 பேரில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்வது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். கட்சி தாவல் சட்டத்தின் கீழும் இந்த நடவடிக்கை வராது, மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும்போது இது கட்சித் தாவல் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நல்ல நட்புடன் இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சியினரை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி இழுத்து வருவது இரு கட்சிகளுக்கும் இடையே பிளவை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பல்வேறு மாநிலங்களில் நிலைநிறுத்தப் போராடி வரும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சேர்வது பெரும் ஊக்கமாக அமையும்

பிஹார் காங்கிரஸைச் சேர்ந்த கீர்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பவான் வர்மா, ஹரியானா அரசியல் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன் திரிணமூல் காங்கிஸில் சேர்ந்த நிலையில் அடுத்ததாக மேகாலயாவில் மாற்றம் நடந்துள்ளது.

திரிபுராவில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மிகப்பெரிய போட்டியளித்து பல இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. அதேபோல, கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை எதிர்த்து பெரிய அ ரசியல் போரை நடத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா , காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியுடன் இருந்து வருகிறார். குறிப்பாக வின்சென் ஹெச் பாலாவை நியமிக்கும்போது தன்னிடம் ஆலோசனை நடத்தாமல் காங்கிரஸ் தலைமை செயல்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக வந்துள்ள மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘ நான் டெல்லிக்கு ஒவ்வொருமுறை செல்லும்போது சோனியா காந்தியை சந்திக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை’ எனத்தெரிவித்தார்

மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டதால் , மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் உருவெடுக்கும். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!