174
கொட்டும் மழை. குடையில்லாமல் நனைகிறது கல்லறைத் தோட்டம். மழையோடு மழையாக நனைந்து கொண்டிருந்து அந்த மனிதம். இறப்பின் வாசலை தொட்டுவிட்ட அதி தீவிர நிமிடம் அது.
ஈரம்சொட்டும் உயிரை தன் தோள் மீது போட்டுக்கொண்டு தனி மனுஷியாக விரைகிறார் ஒரு பெண் காவலர்.
உயிர் பெற்றுவிடாதா என்கிற தவிப்பு. முற்றுப்புள்ளியை கமாவாக்கும் ஒரு விழைவு.
உயிரை பிழிந்து உலர்த்தும் ஒரு கருணை முயற்சி.
மழை வெள்ளம் அறிவிப்புக்கு மத்தியில் அனைத்து ஊடகங்களிலும் இதுவே தலைப்புச்செய்தி.
அண்மைச் செய்தியாக இதன் காணொளி அனைத்து தொலைக்காட்சிகளிலும் வலம் வர ஆரம்பிக்கிறது.
யார் இந்த பெண்காவலர். புருவங்களை உயர்த்தி நிலவு பார்த்த கண்களுக்கு சூரியநிலவாய் தெரிகிறார் அவர்.
அவர் –
கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலகக் காலனியில் காவல் துறை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி அவர்கள்.
ஒரு நாள் ஒரு பரபரப்பு என்பதற்காக மட்டும் காட்சிப்படுத்தப்பட்டதல்ல அந்த காட்சி சித்திரம்.
இவரின் தொடர் பயணத்தில் அது ஒரு காட்சியாக அமைந்தது…அவ்வளவுதான்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் இயற்கை பேரிடர் காலத்திலும் கரம் நீட்டி மனிதம் விதைத்த அவரின் செயல் போற்றக்கூடியது.
குற்றங்களை கண்காணிக்கும் ஒரு காவலர் நேசத்தின் உறைவிடமாக இருப்பது நாம் இன்னும் நல்ல ஆரோக்கியமான சமூகத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு சான்று.
மக்களுக்கு சேவை செய்வதே இந்த காவலரின் மிக முக்கிய வேலையாக இருக்கிறது.
ஒரு பொன் அந்தி பொழுதில் தங்கள் பாராட்டை வெளிப்படுத்திய தோழிகளின் அன்பில் அந்த காவல் நிலையம் குளிர்ந்திருக்கும்.
தண்டனைகள் குற்றங்களை தடுப்பதற்காக.
அன்பு, நேசம் மனிதத்தை வளர்ப்பதற்காக…
add a comment