3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு 24-ல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு வரும் 24-ம் தேதிநடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த சட்டங்களை வாபஸ்பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதிதொடங்குகிறது. அதற்கு முன்னதாக வரும் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வேளாண் சட் டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக் கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இதனிடையே, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பின் கூட்டம் டெல்லிக்கு அருகே சிங்கு பார்டரில் நேற்று நடந்தது. பின்னர் எஸ்கேஎம் தலைவர் பல்பித் சிங் ரஜேவால் கூறும்போது, ”விவசாயிகளின் ‘மகா பஞ்சாயத்து’ கூட்டம் திட்டமிட்டபடி லக்னோவில் திங்கட்கிழமை (இன்று) நடைபெறும். டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடக்கும் இடங்களில் 26-ம் தேதி விவசாயிகள் திரளுவார்கள். 29-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடக்க உள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து, இறந்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க கடிதம் அனுப்புவோம். 27-ம் தேதி எஸ்கேஎம் கூட்டம் மீண்டும் நடக்கும். சூழ்நிலைகளைப் பொறுத்து அப்போது முடிவு எடுக்கப்படும்” என்றார்.
பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறும்போது, “லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயி கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.