ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்… 12 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. பைலட் ஆதரவாளர்களுக்கு பதவி
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதியதாக 12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தான் அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்படுகிறது. பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை சனிக்கிழமையன்று ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் கெலாட், ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்பவன் இல்லத்தில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து வழங்கினார்.
மேலும் அமைச்சரவையில் இருந்து ஏற்கனவே ராஜினாமா செய்த முன்னாள் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தோடசரா புதிய அமைச்சரவைப் பட்டியலில் பங்கேற்க உள்ளவர்களின் பெயர்களை தெரிவித்தார். இந்த புதிய அமைச்சரவையில் ஹேம்ராம் சவுத்ரி, மகேந்திரஜித் சிங் மால்வியா, ராம்லால் ஜெட், மகேஷ் ஜோஷி, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா, மம்தா பூபேஷ் பர்வா, பஜன்லால் ஜாதவ், திக்ராம் ஜூலி, கோவிந்த ராம் மெக்வால் மற்றும் சாகுந்தலா ராவத் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைச்சரவையில் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா, ஹேம்ராம் சவுத்ரி, முரளிலால் மீனா, பிரிஜேந்திர சிங் ஓலோ ஆகியோர் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் ஆவர். அதே சமயம் சச்சின் பைலட்டுக்கு பதிலாக குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த சகுந்தலா ராவத் அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பைலட்டும் குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சரவையில் புதியவர்களாக ஜகிதா, பிரிஜேந்திரா சிங் ஓலா, ராஜேந்திர துர்கா மற்றும் முரளிலால் மீனா ஆகியோர் பதவி ஏற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கும் முதல்முறையாக அமைச்சர்கள் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ராஜேந்திர சிங் குதாவும் அமைச்சரவையில் இடம்பெறுகிறார். புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றவுடன், தேர்தல் பணியில் அதிகம் உழைத்த சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அசோக் கெலாட்டிற்கு பதவி வழங்கப்பட்டதால் சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் திடீர் போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து சோனியா காந்தி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சச்சின் பைலட் சமாதானம் அடைந்தார்.
தற்போது 2023ம் ஆண்டு ராஜஸ்தானில் சட்டப்பேரவை த் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளை சரி செய்யும் வகையில் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தர காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில்தான் நேற்று 15 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.