பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris johnson) குறுக்கிட்டார்.
அப்போது சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் ( Lindsay Hoyle) பொறிஸிடம் , நீங்கள் நாட்டுக்கு பிரதமராக இருக்கலாம் இந்த அவைக்கு நான் தான் பொறுப்பு எனவே உட்காருங்கள் என கூறி அமர வைத்தார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மீது முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி பேசின. பிரிட்டனின் எம்.பி.க்கள் (அமைச்சர் தவிர்த்து) வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை. அதேவேளையில், தங்களுக்கு பணம் வழங்கும் தனி நபர்கள், நிறுவனங்களுக்காக அரசு விதிகளில் மாற்றம் செய்ய முயற்சிக்கக் கூடாது. எம்.பி.க்கள் பலர் இரண்டாவது பணியிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தரப்பில் கூறப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) பொறிஸ் ஜோன்சனை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். பிரதமர் மீதான நம்பிக்கை இதுவரை இல்லாத அளவு குறைந்து உள்ளதாக தெரிவித்த சேர் கீர் ஸ்டார்மர், எல்லோரும் அவருக்காக (பொறிஸ் ஜோன்சன்) மன்னிப்பு கேட்டனர். ஆனால் அவர் தனக்காக மன்னிப்பு கேட்க மாட்டார், அவர் ஒரு கோழை, தலைவர் அல்ல என்றும் விமர்சித்தார். பின்னர் தனது கருத்தை திரும்ப பெற்றார். எனினும் பொறிஸ் தலைவர் அல்ல என உறுதியாக தெரிவித்தார்.
இந்த பேச்சின்போது, பிரதமர் பொறிஸ் ஜோன்சன் குறுக்கிட முயன்றார். அப்போது, சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் பொறிஸிடம் இது பிரதமர் பதிலளிக்க வேண்டிய நேரம், பிரதமரின் கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதிலளிக்கக்கூடிய நேரம் அல்ல என்று தெரிவித்து அவரை அமரவைத்தார். பொறிஸ் தொடர்ந்து குறுக்கிடவே, “பிரதமர் , உட்காருங்கள். நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் இந்த சபைக்கு நான்தான் பொறுப்பு” என்று கூறினார்.