நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், சூர்யகுமார், ரோகித்தின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் (26 வயது) அறிமுகமானார். புவனேஷ்வர் வேகத்தில் தொடக்க வீரர் டேரில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, நியூசி.க்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
அடுத்து கப்திலுடன் மார்க் சாப்மேன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். சாப்மேன் 45 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது. சாப்மேன் 63 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் (0) இருவரும் அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து வெளியேறினர். கப்தில் 31 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 70 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். செய்பெர்ட் 12 ரன், ரச்சின் 7 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின், புவனேஷ்வர் தலா 2, தீபக் சாஹர், முகமது சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக ஆடினர். ரோகித் 48 ரன்னில் (36 பந்து) ஆட்டமிழந்தார். அரைசதம் விளாசிய சூர்யகுமார் 40 பந்தில் 62 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 17 ரன் எடுக்க இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது.