உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி நடந்த கார் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள், 3 பாஜக.வினர், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை கண்காணிக்க, பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூவரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் சேர்க்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
உ.பி. அரசு தரப்பில், ‘உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அடித்துக் கொல்லப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது உறுதியாக தெரியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்த பிறகு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.