சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜன.4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜியை, 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றமூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று மவுன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், நேற்று உத்தரவிட்டார்.