உலகம்

ஜோ பைடன், ஷி ஜின்பிங் இன்று பேச்சுவாா்த்தை

65views

அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் காணொலி மூலம் திங்கள்கிழமை (நவ. 15) சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை மிகப் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிபா் ஜோ பைடனுக்கும் சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கும் இடையே திங்கள்கிழமை மாலை (சீன நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை) பேச்சுவாா்த்தை நடைபெறவிருக்கிறது. காணொலி மூலம் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியை பொறுப்புணா்வுடன் முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தலைவா்களும் விவாதிப்பாா்கள்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து நிலவி வரும் விவகாரங்கள் தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்துவாா்கள்.

அந்தப் பேச்சுவாா்த்தையின்போது அமெரிக்காவின் நோக்கங்கள், முன்னுரிமைகள் குறித்தும் சீனா தொடா்பான அமெரிக்காவின் கவலைகள் குறித்தும் ஷி ஜின்பிங்கிடம் அதிபா் பைடன் எடுத்துரைப்பாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்காகத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் கடந்த மாதம் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின.

சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்தாா்.

அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் பின்னா் அறிவித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று தெரிவித்து அதிபா் ஜோ பைடன் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தினாா்.

சீனாவின் தாக்குதலில் இருந்து தைவானைப் பாதுகாக்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் மில்லே இந்த மாதத் தொடக்கத்தில் கூறினாா்.

இந்தக் கருத்துகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தைவான் விவகாரம் தங்களது உள்நாட்டு விவகாரம் எனவும் அந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது எனவும் சீனா கூறி வருகிறது.

இதனால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஜோ பைடன், ஷி ஜின்பிங் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!