விளையாட்டு

T20 Worldcup| வங்கதேச அணி மீது உண்மை அறியும் குழு விசாரணைக்கு உத்தரவு

62views

உள்நாட்டுக்கு பெரிய அணிகளை அழைத்து குழிப்பிட்ச்களைப் போட்டு படுகுழியில் தள்ளியதோடு தானும் விழுந்த கதைதான் வங்கதேச அணியின் கதை, இதை அறிய என்ன பெரிய உண்மை அறியும் குழு வேண்டிக்கிடக்கிறது.

ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அனைத்துப் போட்டிகளையும் இழந்து பூஜ்ஜியமான வங்கதேச அணியின் ஆட்டம் பற்றி அறிய 2 நபர் உண்மை அறியும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, சம்பந்தப்பட்ட வீரர்கள், கேப்டன், பயிற்சியாளர்கள், வாரிய நிர்வாகிகள், அணி நிர்வாகம் என்று அனைவரிடமும் இந்த உண்மை அறியும் குழு விசாரணை நடத்தவுள்ளது.

“நாங்கள் இந்த விசாரணையை நாளை முதல் தொடங்குகிறோம். ஆனால் பாகிஸ்தான் தொடருக்கான தயாரிப்பை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. கோச் என்ன கூறுகிறார் அவர் அறிக்கை என்னவென்பதைப் பார்த்து அந்த அடிப்படையில் விசாரணை நடக்கும். மேனேஜர், கோச் இருவரிடமும் பேசுவோம்” என்று கமிட்டி உறுப்பினர் ஜலால் தெரிவித்தார்.

பங்களாதேஷ் சூப்பர் 12 சுற்றில் காலியானது ஒருபுறம் இருக்கட்டும், கத்துக்குட்டியான ஸ்காட்லாந்திடம் தகுதிச்சுற்றில் தோற்றதுதான் யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாயிற்று. பிறகு பபுவா நியு கினியாவையும் ஒமானையும் வீழ்த்தி ஒருவழியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றால் அங்கு 5க்கு 5 தோல்வி. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஃபைட் செய்தனர்.

ஆனால் ஷாகிப் அல் ஹசன் காயத்தினால் ஆட முடியாமல் போக 84 மற்றும் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் செம உதை வாங்கினர். வங்கதேச அணியில் மாற்றங்களைக் கொண்டு வரவும் பவர் ஹிட்டர்களைத் தேடிக்கண்டுப்பிடித்து அணியில் சேர்க்கவும் முடிவெடுத்துள்ளனர்.

நவம்பர்-டிசம்பரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் வங்கதேசம் ஆடுகிறது. 2022 உலகக்கோப்பைக்கு சூப்பர் 12க்கு வங்கதேசம் நேரடியாகத் தகுதி பெற்றதுதான் கொடுமை. ஓரளவுக்கு நன்றாக ஆடிய இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மட்டும் தகுதி சுற்றில் ஆடி வரவேண்டுமாம்.

வங்கதேச அணியின் பிட்ச்களை இனி ஐசிசி தரநிலைக்கு உட்படுத்தியே அங்கு போட்டிகளை அனுமதிக்க வேண்டும், குழிபிட்ச் என்றால் எதிரணிக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போகும் பிட்ச்கள், ஆனால் அத்தகைய பிட்ச்களில் ஆடி ஆடி வங்கதேச அணி தனக்கே குழி தோண்டி, உலகக்கோப்பையில் பல் இளித்ததுதான் உண்மை, இதை கண்டறிய எதற்கு உண்மை அறியும் குழு?

Right Click & View Source is disabled.

error: Content is protected !!