இந்தியா

தமிழை ஒருபோதும் பயிற்று மொழியாக்க முடியாது.. மத்திய அரசு தடாலடி அறிவிப்பு

73views

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கிறது. அதனால் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும், ஆக்குவதற்கு ஆணையிட வேண்டும்.

மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநில மொழியை கட்டாயப் பாடமாகவும் பயிற்று மொழியாக்குவதற்கு ஆணையிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் கூறியதாவது, தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழும் ஒரு பாடமாக இருக்கிறது தமிழைப் பயில விரும்பும் மாணவர்கள் அதை தேர்வு செய்து பயிலும் வகையில் இருக்கிறது.

அதே போன்று எந்த மாநிலத்தில் மத்திய அரசு பள்ளி இயங்குகிறதோ அந்த மாநில மொழி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதிகமாக மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்காகவே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும்போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதனால் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதற்காக இந்தப் பள்ளிகள் நடத்தப்படுகிறது என்று கூறி வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!