உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன.கத்தார் தலைநகர் தோகாவில், அடுத்த ஆண்டு (நவ.
21 – டிச. 18) ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தென் அமெரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 4 இடங்களுக்கு, 10 அணிகள் விளையாடுகின்றன.
பிரேசிலில் நடந்த போட்டியில் உருகுவே, பிரேசில் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அணிக்கு நெய்மர் (10வது நிமிடம்), ராபின்ஹா (18, 58வது), கேப்ரியல் பார்போசா (83வது) கைகொடுத்தனர். உருகுவே அணிக்கு லுாயிஸ் சாரஸ் (77வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
அர்ஜென்டினாவில் நடந்த மற்றொரு போட்டியில் பெரு, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் மார்டினஸ் (43வது நிமிடம்) கைகொடுக்க அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. சிலியில் நடந்த போட்டியில் சிலி அணி 3-0 என, வெனிசுலாவை தோற்கடித்தது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் முடிவில் 10 வெற்றி, ஒரு ‘டிரா’ என, 31 புள்ளிகளுடன் பிரேசில் அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த மூன்று இடங்களில் அர்ஜென்டினா (25 புள்ளி), ஈகுவடார் (17), கொலம்பியா (16) அணிகள் உள்ளன.