டி-20 உலகக் கோப்பைத் தொடருடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ட்வைன் பிராவோ. ஆல்ரவுண்டரான இவருக்கு இப்போது 38 வயது. கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பிராவோ, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆடி வந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு 2019-ம் ஆண்டு தனது முடிவை மாற்றினார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டியளித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டி-20 உலகக் கோப்பை தொடரில், நேற்று இலங்கையுடன் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. அதோடு அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணியுடன் நாளை நடக்கும் போட்டியுடன் பிராவோ, தனது ஓய்வு முடிவு அறிவிக்கிறார்.
இதுபற்றி கூறிய அவர், ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. கடந்த 18 வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியிருப்பது பெருமையாக இருக்கிறது. இதில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் திரும்பிப் பார்க்கும்போது பெருமையாகவே உணர்கிறேன். என் அனுபவங்களை இளம் வீரர்களுக்கு வழங்க ஆர்வமுடன் இருக்கிறேன். ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது அவசியம். இந்த டி-20 உலகக் கோப்பை தொடர், நாங்கள் எதிர்பார்த்தது அல்ல. இது கடினமான போட்டி. இருந்தாலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங் அணியின் முக்கிய வீரரான பிராவோ, டி-20 லீக் தொடர்களில் தொடர்ந்து ஆடுவாரா என்பது பற்றி தெரிவிக்கவில்லை.