கடந்த அக்டோபரில், பணியமர்த்தும் நடவடிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என, ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த அக்டோபரில் பணியமர்த்தல் நடவடிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
தொழில்நுட்பத்துறை நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதை அடுத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில், முந்தைய ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது, இத்துறையானது 85 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.அரசின், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்திட்டம் மற்றும், 5ஜி சேவைகளுக்கான முயற்சிகள் ஆகியவை, தொலைதொடர்பு துறையில் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில்லரை விற்பனை, விருந்தோம்பல், பயணம் ஆகிய துறைகளும், விடுமுறை காலத்தை ஒட்டி மீண்டும் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது.
இதனால் இத்துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.மேலும் கல்வி, வங்கி, நிதி சேவைகள் ஆகிய துறைகளும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சியை கண்டுவருகிறது. ஒட்டுமொத்தத்தில் பணியமர்த்தும் நடவடிக்கை, கொரோனாவுக்கு முந்தைய கால நிலைக்கு, நடப்பு ஆண்டு அக்டோபரில் திரும்பி உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.