உலகம்

COP26 பருவநிலை மாற்ற மாநாடு: 190 நாடுகள் மற்றும் அமைப்புகள் நிலக்கரியை கைவிடுவதாக உறுதி

72views

போலாந்து, வியட்நாம் மற்றும் சிலி போன்ற பெரிதளவில் நிலக்கரியை பயன்படுத்தும் நாடுகள் அதை கைவிடுவதாக உறுதியளித்துள்ளன.

ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாற்ற மாநாட்டில் இதை தெரிவித்ததாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு புதைப்படிம எரிபொருளான நிலக்கரி ஒரு மிகப்பெரிய காரணமாக உள்ளது.

இருப்பினும் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீனா என நிலக்கரியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகள் நிலக்கரியை கைவிடுவதற்கான உறுதிப்பாட்டில் கையெழுத்திடவில்லை.

நிலக்கரியை கைவிடுவதாக ஒப்புக் கொண்ட நாடுகள், நிலக்கரியின் மூலம் மின்சாரம் தயாரிப்பில் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ புதியதாக எந்த முதலீடுகளையும் மேற்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளன.

“நிலக்கரியை கைவிடுவது முக்கிய குறிக்கோளாக உள்ளது” என பிரிட்டனின் வர்த்தகம் மற்றும் ஆற்றல் துறையின் செயலர் க்வாசி க்வார்டெங் தெரிவித்துள்ளார்.

மேலும் “உலகம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. நிலக்கரியின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் கிடைக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பயன்பாட்டை தழுவ தயாராகவுள்ளது” என்றார்.

இந்த உறுதிப்பாட்டில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. போலாந்து, சிலி, வியட்நாம் உள்ளிட்ட 18 நாடுகள் முதன்முறையாக நிலக்கரி பயன்பாட்டை கைவிடுவதாகவும், புதிய நிலக்கரி திட்டங்களில் முதலீடு செய்வதை நிறுத்துவதாகவும் தெரிவித்திருக்கின்றன என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் உலகளவில் அதிக கார்பனை உமிழும் நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்துவதற்கான எந்த உறுதிப்பாட்டையையும் அளிக்காதது “ஒரு பெரும் இடைவெளியை” உருவாக்குகிறது என பிரிட்டனின் நிழல் வர்த்தக செயலர் ஈத் மிலிபண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாடு குறித்த எந்த பேச்சும் இல்லை என்பதும் கவலையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் அரசு, பிற நாடுகளை வளையத்திற்குள் வரவைக்க தவறிவிட்டது என்று தெரிவித்தார்.

சர்வதேச அளவில் நிலக்கரி பயன்பாடு குறைய தொடங்கினாலும், 2019ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் 37% மின்சாரம் நிலக்கரியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா, போலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதற்கு மிகப்பெரிய அளவில் முதலீடுகள் தேவை.

புதைபடிம எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் வெளியாகும் புகையால் உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் தீவிர நிகழ்வுகளான வெப்ப அலைகள், வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை அதிகரித்து வருகின்றன.

இதுவரை வெப்பம் பதிவு செய்யப்பட்ட காலங்களிலேயே கடந்த தசாப்த தான் மிகவும் அதிக வெப்பம் வாய்ந்ததாக உள்ளது.

அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் இவற்றைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை தேவை என்று ஒப்புக் கொண்டுள்ளன.

கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் வாயிலான தங்கள் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களிடம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பதை, இதில் பங்கேற்கும் 200 நாடுகளும் தெரிவிக்க வேண்டும்.

தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியசுக்கும் மிகாமல் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று 2015ஆம் ஆண்டு உலக நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

2 டிகிரிக்கும் மிகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு.

பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் பேரழிவுகளை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் கையெழுத்திட்டு இந்த ஒப்பந்தம்தான் “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2050ஆம் ஆண்டில் தங்களது நிகர எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியம் எனும் அளவில் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெருமளவில் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டி இருக்கும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!