‘உள்நாட்டில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ரூ.8,000 கோடி ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கியது பாதுகாப்பு கவுன்சில்
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை வாங்க இந்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி, அவ்வாறு தயாரிக்கப்படும் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் ரூ.7,965 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்துஸ்தான் ஏரோனேட்டிக்கல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தயாரிக்கும் 12 இலகு ரக ஹெலிகாப்டர்கள், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்தயாரிக்கும் ‘லின்க்ஸ் யு 2’ ரகத்திலான தாக்குதல் கண்காணிப்புக் கருவி, பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சூப்பர் ரேபிட் கன் மவுன்ட்ஸ் (போர்க் கப்பல் துப்பாக்கிகள்) கண்காணிப்பு விமானம் ஆகிய தளவாடங்கள் வாங்கப்படவுள்ளன.
இவற்றில் 12 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ராணுவம் மற்றும் விமானப் படைக்காக வாங்கப்படுகின்றன. ‘லின்க்ஸ் யு 2’ தாக்குதல் கண்காணிப்புக் கருவி, சூப்பர்ரேபிட் கன் மவுன்ட்ஸ், கண்காணிப்பு விமானம் ஆகியவைகடற்படைக்காக வாங்கப்படவுள்ளன. ராணுவம் மற்றும் விமானப் படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள சீட்டா, சேட்டக் ரக ஹெலிகாப்டர்களுக்கு ஓய்வு வழங்கி அவற்றுக்கு பதிலாக இலகு ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.