சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக். மும்பை ஓட்டல்கள், மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து மாதம்,100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுத் தர இவர் நெருக்கடி கொடுத்ததாக, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் குற்றம்சாட்டி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். இதையடுத்து சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான ரூ4.20 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதுடன் மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் சட்ட விரோதமாக ரூ4.70 கோடியை வசூலித்தார் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவர் உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யபட்டனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் தேஷ்முக்கிற்கு ஐந்து முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தார். அந்த சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந் நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது மகாராஷ்டிர அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை அனில் தேஷ்முக் மறுத்துள்ளார்.