உலகம்

“கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள்

60views

கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து தங்களால் கண்டறிய இயலாது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆனால் அதே சமயம் கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் முகமைகள் தெரிவித்துள்ளன.

வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற ஆய்வு குறித்த சமீபத்திய அறிக்கையில், அமெரிக்க தேசிய உளவு அமைப்பு இயக்குநரகம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் வந்திருக்கலாம் மற்றும் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற இரண்டுமே நம்பத்தகுந்த கருதுகோல்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இல்லை.

இந்த அறிக்கையை சீனா விமர்சித்துள்ளது.

இந்த முடிவுகள் வகைப்படுத்தப்படாத அறிக்கையில் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு மாதம் பைடன் நிர்வாகம் வைரஸின் தோற்றம் குறித்து வழங்கிய அறிக்கைக்கு பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் வைரஸின் தோற்றம் குறித்த கணிப்பில் உளவு அமைப்புகளுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு உளவு முகமைகள் பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து இந்த வைரஸ் தோன்றியிருக்கலாம் என்பது குறித்து “குறைந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன”

ஒரு முகமை முதல் முறையாக மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டது ஆய்வக விபத்தால் நேர்ந்திருக்கலாம் என்பதில் “மிதமான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளது”. வுவான் ஆய்வகத்தில் விலங்கை கொண்டு நடத்தப்பட்டட ஏதேனும் சோதனையில் இது நடந்திருக்கலாம் என்று அந்த முகமை தெரிவிக்கிறது.

2019ஆம் ஆண்டில் வுஹான் நகரில் முதன்முறையாக கோவிட் உருவாகும் முன்பு இதுகுறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சர்வதேச அளவில் நடைபெறும் விசாரணைக்கு சீனா தொடர்ந்து இடையூறு வழங்கியதாகவும், தகவல்களை பகிர அந்நாடு விரும்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அதிகாரிகள் கொரோனா தொற்று முதலில் தோன்றிய போது அதை வுஹானில் உள்ள கடல் உயிரின சந்தையுடன் தொடர்புபடுத்தினர். இதனால் இந்த வைரஸ் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பினர்.

ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக கசிந்து இருக்கலாம் என அமெரிக்கா உளவு அமைப்புகளின் ஆய்வு தெரிவித்திருந்தது.

மே மாதம் கொரோனா தொற்று எங்கிருந்து வந்தது என ஆய்வு செய்ய பைடன் உத்தவிட்டிருந்தார். இது ஆய்வகத்திலிருந்து கசிந்து வந்ததா என்பதை ஆராயவும் பைடன் உத்தரவிட்டிருந்தார் ஆனால் சீனா அதை மறுத்திருந்தது.

அமெரிக்க உளவு அமைப்பின் ஆய்வுக்கு பதிலளித்த அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம், “கொரோனா தொற்று எவ்வாறு உருவாகியது என்பதை கண்டறிய அமெரிக்கா விஞ்ஞானிகளை நம்பாமல் தனது உளவு அமைப்புகளை நம்பியிருப்பது அரசியல் கேலிக் கூத்து” என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என, அமெரிக்காவின் 18 உளவு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் அலுவலகம் தீர்மானமாக தன் முடிவை குறிப்பிட்டிருந்தது.

“அனைத்து உளவு அமைப்புகளும் இரு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறார்கள். அதில் ஒன்று இயற்கையாக பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டது, மற்றொன்று ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்கள்.” என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 2019-ல் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுநாள் வரை உலகம் முழுக்க சுமார் 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட விலங்கிடம் இருந்து பரவி இருக்கலாம் என கூறியது. அந்த ஆய்வு முடிவுகளை சில விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!