இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அரசியலிலும் கோலோச்சுகிறார்கள்.
உதாரணமாக கமலா ஹாரிஸ் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கிறார். இதேபோல பல்வேறு இந்தியர்கள் பல நாடுகளில் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். எம்பியாக இருக்கிறார்கள். அமைச்சர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் இந்தியாவைச் சேந்த அனிதா ஆனந்த்.
சமீபத்தில் கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் சிறுபான்மை அரசை தான் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் நிறுவியிருக்கிறார். இருப்பினும் மூன்றாம் முறையாகப் பிரதமராகியிருக்கிறார். தற்போது தனது அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாற்றம் செய்திருக்கிறார். அந்த வகையில் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக அனிதா ஆனந்தை நியமித்துள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சராகும் 2ஆவது பெண். இதற்கு முன்னதாக அந்தப் பதவியில் மற்றொரு இந்தியரான ஹரிஜித் சஜ்ஜன் இருந்தார்.
ஆனால் பாதுகாப்பு துறையில் குவிந்த பாலியல் புகார்களைச் சரிவர கையாள காரணத்தால் அவரை சர்வதேச மற்றும் பசிபிக் மேம்பாட்டு துறை அமைச்சராக பிரதமர் நியமித்துள்ளார். நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்கள் மூவரில் அனிதா ஆனந்தும் ஒருவர். வழக்கறிஞராகவும் பேராசியராகவும் பணியாற்றிருக்கிறார். அனிதா ஆனந்த் 2019ஆம் ஆண்டு தேர்தலில் எம்பியானார். அதன்பின் கொரோனா பரவலையொட்டி கொள்முதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தைக்கும் பஞ்சாப்பை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.