சரவெடிகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீட்டிக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் என கருத்துக் கூறிய உச்சநீதிமன்றம், உத்தரவு கட்டாயம் கடைபிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 2017, 2018 ஆம் ஆண்டு உத்தவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், வழங்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அதாவது காலை 6-7, இரவு 7-8 மணி வரையிலும் வெடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து, கூடுதல் கால அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பேரியம் உப்புகள் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கவும் தடை, சரவெடி தயாரிக்க மற்றும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தி, தயாரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான விதிகளை மீறினால் மாநில தலைமைச் செயலர், மாநில காவல்துறை தலைவர், குறிப்பிட்ட மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அந்தப் பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் ஆகியோர் தண்டிக்கப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.