தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கோலோச்சி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை காரணமாக ஆண்டுதோறும் அமெரிக்கா சென்று ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.
சமீபத்தில் டெல்லியில் 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனால் டெல்லி சென்றிருந்த அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்த சூழலில் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பரவ தொடங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து விளக்கமளித்த லதா ரஜினிகாந்த், ‘ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து கவலைப்பட எதுவும் இல்லை. அவர் நலமாக உள்ளார்’ என்றார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக உள்ளார்; நான் நேரில் பார்த்தேன், ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று காவேரி மருத்துவமனையில் ரஜினி உடல்நலம் குறித்து விசாரித்த பின் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டியளித்துள்ளார். அத்துடன் நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.