சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் எம்.ஆா். விஜயபாஸ்கா் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது.
இதன் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். அவா் மற்றும் குடும்பத்தாா் தொடா்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-இல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், சொத்து, முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செப்டம்பா் 30-இல் ஆஜராகும்படி எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது உள்ளாட்சித் தோதலுக்காக அவா் ஆஜராகவில்லை. இதை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அக். 25-இல் ஆஜராக அழைப்பாணை அனுப்பியிருந்தது.
எம்.ஆா். விஜயபாஸ்கா் திங்கள்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய சகோதரா் சேகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.