டி 20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்; ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் மே.இ.தீவுகள் – இங்கிலாந்து மோதல்
ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்றான சூப்பர் 12 இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் அபுதாபியில் பிற்பகல் 3.30 மணி அளவில் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் பலர் சமீபகால போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 13 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 5 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டது. டேவிட் வார்னரின் பார்ம் கவலை அளிப்பதாக உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆரோன் பின்ச் போட்டிக்கான போதிய பயிற்சியில் ஈடுபடவில்லை. துணை கேப்டன் பாட்கம்மின்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தற்போதுதான் விளையாட உள்ளார்.
எனினும் ஸ்டீவ் ஸ்மித், ஆல்ரவுண்டர்களான மார்கஸ் ஸ்டாயினிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோரை உள்ளடக்கிய மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. இதேபோன்று வேகப் பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஜோஸ் ஹசல்வுட் ஆகியோரும் சுழலில் அஷ்டன் அகர், ஆடம்ஸம்பா ஆகியோரும் வலுசேர்க்கக்கூடியவர்களாகத் திகழக் கூடும்.
தென் ஆப்பிரிக்க அணி சமீபகால போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரை வென்றிருந்தது. பந்து வீச்சில் காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே,லுங்கி நிகிடி, ஷம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோர் பலம் சேர்ப்பவர் களாகத் திகழ்கின்றனர்.
இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. இரு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் 2 பயிற்சி ஆட்டங்களில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறி யது.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சேம் கரண் விளையாடாதது அணியின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் கேப்டன் மோர்கனின் பார்மும் கவலை அளிப்பதாக உள்ளது. ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி ஆகியோரை நம்பியே பேட்டிங் உள்ளது. சுழற்பந்தில் ஆதில் ரஷித் சவால் அளிக்கக்கூடும்.