உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த 3-ம் தேதி பாஜகசார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அப்போது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கு பேரணி சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற பாஜகவினரின் கார் ஒன்று, விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து, அங்கு நடைபெற்ற மோதலில் 4 விவசாயிகள் 3 பாஜக நிர்வாகிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஓட்டி வந்த காரே விவசாயிகள் மீது மோதியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தபோதிலும், ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதையடுத்து, இரு வழக்கறிஞர்கள் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியது. அப்போது ஆசிஷ் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையையும், உ.பி. அரசையும் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக, ஆசிஷ் மிஸ்ரா உட்பட 10 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையானது, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.