தமிழகம்

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும்: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

41views

மன்னார் வளைகுடாவில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா – இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்குமட்டுமே சொந்தமானது போல கருதிக்கொண்டு தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

1980-களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதும், படுகாயம்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்பியவுடன், அதை திசைத் திருப்பும் வகையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு நாடகத்தை ராஜபக்சே அரசு அரங்கேற்றியிருக்கிறது. இதைநான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவி அத்துமீறி செயல்படும் அந்நிய நாட்டுப் படைகளுக்கு இந்தியப் படைகள் உடனுக்குடன் பதிலடிக் கொடுப்பதை போல, மன்னார் வளைகுடாப் பகுதியில் அத்துமீறும் இலங்கை கடற்படைக்குப் பதிலடிக்கொடுக்க இந்தியக் கடற்படைமுன்வரவேண்டும். தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!