உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து, விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் பலியாயினர். இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதனால் அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அமைப்பான, சம்யுக்த் கிசான் மோர்ச்சா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 10:00 மணி முதல், ஆறு மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தும், படுத்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தையொட்டி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதுகுறித்து, வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:விவசாயிகளின் மறியல் காரணமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 150 இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் 60 ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியாமல் போனதால் அவற்றில் செல்ல வேண்டிய பயணியர், ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நிலை உருவானது.சண்டிகர் – பெரோஸ்பூர் மற்றும் புதுடில்லி – அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் உட்பட 10 ரயில்கள் பாதி வழியிலேயே ரத்து செய்யப்பட்டன.
ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் ரயில் மறியல் தீவிரமாக இருந்ததால் பதிந்தா — ரேவாரி மற்றும் சிர்சா – லுாதியானா சிறப்பு ரயில்கள் உட்பட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆமதாபாத் – ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா சிறப்பு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.