தமிழகம்

சென்னையில் 100 மின்சார பேருந்துகளை ஜனவரியில் இயக்க பணிகள் தீவிரம்: 6 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைகிறது

48views

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், 6 இடங்களில் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்கள் மூலம் முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, ஜனவரியில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில், முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம். இதற்காக பயணிகள் அதிகமாக செல்லும் வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம்.

அதேபோல், சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனை, திருவான்மியூர், அடையார் உட்பட 6 பணிமனைகளில் சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வுகள் முடிந்து, பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, வரும் ஜனவரியில் மின்சார பேருந்துகளின் சேவை சென்னையில் தொடங்கப்படும். அதன்பிறகு மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையும், சார்ஜிங் மையங்களும் படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு போக்குநவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!