சீன அதிபர் ஜின்பிங், வளரும் நாடுகளில் பல்லுயிர் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளுக்கு ரூ.1700 கோடி நிதி வழங்குவதாக ஐநா கூட்டத்தில் அறிவித்தார். உயிரியல் பன்முகத்தன்மை குறித்து ஐநாவின் 15வது தலைவர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசியதாவது: உலகிலேயே அதிகளவில் கார்பன் உமிழ்வை வெளியிடும் நாடாக உள்ள சீனா, 2060க்குள் கார்பன் உமிழ்வை முழுமையாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக சீனா தனது தொழில் துறை அமைப்பு மற்றும் எரிசக்தி கலவையை தொடர்ந்து சீரமைக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தீவிரமாக உருவாக்கும். மேலும் மணல் பரப்புகள், பாறை நிறைந்த பகுதிகளில் காற்றாலை தொழில்நுட்பத்தை வேகமாக மேம்படுத்தும்.
சுற்றுச்சூழல் நாகரீகத்தை உருவாக்குவதில் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. யுனான் மாகாணத்தில் யானைக் கூட்டங்கள் மீண்டும் தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பி உள்ளன. காட்டு விலங்குகளை பாதுகாப்பதற்கான எங்களின் முயற்சிகள் நல்ல பலனை அளிப்பதை இது காட்டுகிறது. வளரும் நாடுகளில் பல்லுயிர் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீன அரசு தனது பங்களிப்பாக ரூ.1700 கோடியை முதலீடு செய்கிறது என்பதை இங்கு அறிவித்துக் கொள்கிறேன். இதே போல மற்ற நாடுகளும் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகள், ஆர்வம் கொண்டவைகளாக நிர்ணயிக்கப்பட வேண்டிய அதே சமயத்தில் அவை நடைமுறைப்படுத்தும் விதமாகவும், சமநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.