இந்தியா

பிரபல நடிகர் நெடுமுடி வேணு மரணம்: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

129views

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (73) நேற்று காலமானார். மலையாள சினிமாவில் கடந்த 1978ல் அரவிந்தன் இயக்கிய தம்பு என்ற படத்தில் அறிமுகமானவர் நெடுமுடி வேணு. பின்னர் நாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பஞ்சவடிபாலம், காதோடு காதோரம், தேவாசுரம், பரதன் உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ள இவர், 7 படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 3 முறை தேசிய விருதும், 6 முறை மாநில விருதும் பெற்றுள்ளார். தமிழில் இந்தியன், சர்வம் தாள மயம், சிலம்பாட்டம், அந்நியன், சமீபத்தில் வெளியான நவரசா உள்ளிட்ட படங்களில்

நடித்துள்ளார். எந்த வேடத்தை தந்தாலும் அதில் அந்த கேரக்டராகவே மாறிவிடும் இயல்பான நடிகர், நெடுமுடி வேணு. திலகனை போல் இவரும் மலையாளம், தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர்.

இந்த நிலையில் கடந்த மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார். ஆனால் நுரையீரல் பாதிப்பு மற்றும் இதய நோய் இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மதியம் 1.30 மணியளவில் இறந்தார். கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன், நடிகர், நடிகைகள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!