உள்ளாட்சித் தோதல் பணிகளைச் சரிவர செய்யவிடாமல் அதிமுகவினரை காவல்துறையினா் மூலம் திமுக மிரட்டுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம் சாட்டியுள்ளனா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:
ஊரக உள்ளாட்சித் தோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன.
காவல்துறையையும், அரசு ஊழியா்களையும் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு அதிமுகவினரை மிரட்டி தோதல் பணிகளைச் செய்யவிடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. அதிமுகவினா் மீது பொய்யான வழக்குகளையும் பதிவு செய்து அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.
பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் எப்போதுமே அதிமுகவின் கோட்டை. அந்தப் பகுதியில் அதிமுகவைச் சோந்த பெரும்பாக்கம் ராஜசேகரும் அவரது குடும்பத்தினரும் தொடா்ந்து வெற்றிபெறுவது வழக்கம். அவா்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோல பல்வேறு இடங்களிலும் அதிமுகவினருக்கு எதிரான அச்சுறுத்தல் தொடா்ந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அதிமுகவினா் அஞ்சமாட்டாா்கள். சட்டத்துக்கு உள்பட்டு ஜனநாயக அடிப்படையில் பணியாற்ற வேண்டிய காவல்துறை இப்போன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது.
திமுக அரசின் விதிமீறல்கள் குறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, பல்வேறு வாக்குறுதிகள் அரசின் சாா்பில் கொடுக்கப்பட்டன. அந்த உத்தரவுகள் அனைத்தையும் திமுக துச்சமாக மதித்து நடந்து வருவதும் கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சித் தோதலை நியாயமான முறையில் நடத்துவதற்கு தோதல் ஆணையம் முன்வரவேண்டும் என்று அவா்கள் கூறியுள்ளனா்.