பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி.
புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான கடுமையான பலபரீட்சைகள் இன்று நடந்தநிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் பெங்களூரு அணியின் சார்பில், விராட் கோலி, தேவதூத் படிக்கல், கே.எஸ்.பாரத், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டான் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் தனது ப்ளே ஆப் வாய்ப்பை பெங்களூரு உறுதி செய்யுமா என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்சிபி அணியில், 4 சிக்சர்கள், 3 பவுன்டிரிகள் என மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 57 ரன்களை அதிரடியாக விளாசினார். இவரையடுத்து 38 பந்துகளில் 40 ரன்களை படிக்கல் விளாசினார். முதலில் களமிறங்கிய கோலி 25 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 23 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பொலிங்கை பொறுத்த அளவில், முகமது ஷமி 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதே போல மோயிஸ் ஹென்ரிக்ஸ் 4 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்த சூழலில் 165 ரன்களை இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா எனும் நிலையில், முதலில் களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தலா 39 மற்றும் 57 ரன்களை 35, 42 பந்துகளில் குவித்தனர். ஆனால் இவர்களையடுத்து களமிறங்கியவர்கள் சொதப்ப தொடங்கினர்.
ஏற்கெனவே ராகுலும், அகர்வாலும் அதிக பந்துகளை தாங்கள் எடுத்துகொண்ட நிலையில் அடுத்தடுத்து வந்தவர்களும் அதிக பந்துகளை வீணாக்கினர்.
இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி தோல்வியடைந்தது. பொலிங்கை பொறுத்த அளவில், யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.