மர்ம தேசமான வடகொரியா, சமீபகாலமாக அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அடிக்கடி சோதனை செய்து உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன. இந்த நிலையில், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-க்கு வடகொரிய அரசில் முக்கியப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. `கிம் ஜாங் உன்னைத் தொடர்ந்து வடகொரியாவின் ஆட்சிப் பொறுப்பு கிம் யோ ஜாங்-கின் கைக்குக்கூட வரலாம்’ என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், வடகொரியாவின் இந்த அரசியல் நகர்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல்-லின் இளைய மகள்தான் கிம் யோ ஜாங். இவர் தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் முக்கிய அரசியல் ஆலோசகராக இருந்துவருகிறார். கிம் யோ ஜாங்-கை, இந்த உலகுக்கு முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியது தென்கொரியாவில் நடந்த வின்டர் ஒலிம்பிக்ஸ் நிகழ்வுதான். 2018-ல், தென்கொரியாவில் நடந்த வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து கலந்துகொண்டன. இதன் காரணமாக வடகொரியா சார்பில் தென்கொரியாவுக்குச் சென்றிருந்தார் கிம் யோ ஜாங். அங்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே ஆகியோரோடு கிம் யோ ஜாங் எடுத்துக்கொண்ட புகைப்படம் உலக வைரலானது.
தொடர்ந்து, சீனா அதிபர் ஷி ஜிங்பிங்கைச் சந்தித்தார் கிம் ஜாங் உன். இதையடுத்து வடகொரியாவின் மற்றுமொரு அரசியல் முகமாக மாறினார் அவர். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மூன்று முறை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தார். மூன்று முறை நடந்த சந்திப்பிலும் தனது சகோதரருடன் இருந்தார் கிம் யோ ஜாங். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சந்திப்புகளில் கிம் யோ ஜாங் இடம்பெற்றிருந்ததால், சர்வதேச அரசியலில் கவனம்பெற்றார்.
கடந்த ஆண்டு மத்தியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. `வடகொரியாவின் தந்தை’ எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் எப்போதும் தவறாமல் பங்குகொள்ளும் அதிபர் கிம் ஜாங் உன், கடந்த முறை கலந்துகொள்ளவில்லை. ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதால், `கிம் ஜாங் உன் இறந்துவிட்டார்’ என்ற வதந்திகள் பரவின. அந்தச் சமயத்தில், தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய அதிபர் இறக்கவில்லை; கோமாவில் இருக்கிறார். ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தும் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என்றிருந்தார். அப்போதே `கிம் யோ ஜாங்தான் வடகொரியாவின் அடுத்த அதிபராக இருப்பார்’ என்ற செய்திகளும் வலம்வந்தன.
இந்த நிலையில், தற்போது `வடகொரிய விவகார ஆணையக் குழு’வின் உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார் கிம் யோ ஜாங். வடகொரிய அரசின் உயர்மட்ட குழுவான, இந்த விவகார ஆணையக் குழுதான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. சில மாதங்கள் முன்பாக, இந்தக் குழுவின் உறுப்பினர்கள் சிலர் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெற்றனர். சிலர் முறையான காரணங்கள் சொல்லப்படாமல் நீக்கப்பட்டனர். இதையடுத்து, இந்தக் குழுவில் தற்போது, புதிதாக எட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒரு உறுப்பினராக கிம் யோ ஜாங்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண் கிம் யோ ஜாங் மட்டுமே.
“கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, அவர் கோமாவில் இல்லை, ஆனால் அவருக்கு பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் இருக்கின்றன என்றும் செய்திகள்வந்தன. இந்த நிலையில், உடல் எடையைக் குறைத்து, ஹேர் ஸ்டைலை மாற்றி `நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக கிம் ஜாங் உன் சொல்லும் வகையில் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. தற்போது வடகொரிய அரசின் உயர்மட்டக் குழுவில் கிம் யோ ஜாங் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தத் தொடர் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கையில், கிம் குடும்பத்திலிருந்து, கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு வடகொரியாவை ஆட்சி செய்வதற்கு, அவரது சகோதரியை தயார்ப்படுத்தி வருவதாகவே தெரிகிறது. அதற்கான முன்னேற்பாடாகத்தான் அரசின் உயர்மட்டக் குழுவில் கிம் யோ ஜாங் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை வரும்காலத்தில், கிம் யோ ஜாங் ஆட்சிப் பொறுப்பேற்றால், வடகொரியாவின் அரசியல் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் கொரிய அரசியலைக் கவனித்து வருபவர்கள்.
`சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்திவரும் வடகொரியாவை, கிம் ஜாங் உன்னுக்குப் பின்னர் ஆளப்போவது யார்?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கு, `கிம் யோ ஜாங்’ என்ற பெயர்தான் பதிலாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!