தமிழகம்

ஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

56views

ஜி.எஸ்.டி. கவுன்சில் சீர்த்திருதக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று மாநில சுயாட்சிக் கோட்பாட்டை அவர் வலியுறுத்தியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. கடந்த 17-ந் தேதி லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்தது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அண்ணாமலை ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல்ராஜன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் சீர்திருத்த குழுவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இந்த குழுவுக்கு மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் தலைமை வகிப்பார்.

இந்த நியமனம் தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த GSTகவுன்சில் நிலக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் கவுன்சிலுக்கு எனது நன்றிகள் முதல்வர் @mkstalin அவர்கள் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்களையும் என்னையும் தமிழ்நாட்டில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பணியாற்ற சொல்லியிருந்தார். தற்போது இந்திய அளவிலான செயல்முறையை மேம்படுத்த நண்பர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!