மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 53 ரன்களும் எடுத்தனர்.
14-வது ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். பவர் பிளே ஓவர்களில் தொடர்ச்சியாக மிரட்டி வரும் டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கில் 1 சிக்ஸரும், வெங்கடேஷ் 1 சிக்ஸரும் பறக்கவிட்டு அதிரடி தொடக்கத்துக்கு விதை போட்டனர்.
ஆடம் மில்ன் வீசிய 2-வது ஓவரில் வெங்கடேஷ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசினார். தொடர்ச்சியாக இரண்டு ஓவர்களில் கொல்கத்தா மிரட்டியதால் விக்கெட்டுக்காக 3-வது ஓவரில் ஜாஸ்பிரித் பும்ராவை அறிமுகப்படுத்தினார் ரோஹித் சர்மா.
விக்கெட் விழுந்ததால், மீண்டும் போல்ட்டை பந்துவீச அழைத்தார் ரோஹித். ஆனால், புதிதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதியும் அந்த ஓவரில் பவுண்டரி அடிக்க 5-வது ஓவரிலேயே இடது கை பேட்ஸ்மேன் இருந்தாலும், கிருனால் பாண்டியாவை அறிமுகப்படுத்த வேண்டியக் கட்டாயம் மும்பைக்கு ஏற்பட்டது. இதற்குப் பலனாக பாண்டியா ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
மில்ன் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் மீண்டும் அதிரடிக்கு மாறியது கொல்கத்தா. அந்த ஓவரில் திரிபாதி அடித்த பவுண்டரி உள்பட மொத்தம் 12 ரன்கள் கிடைத்தன.
மீண்டும் பும்ரா வீசிய பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். எனினும் அவர் அரை சதத்தைக் கடந்து 53 ரன்கள் எடுத்து இலக்கை எட்ட உதவினார்.
அதன் பிறகு வந்த இயான் மார்கன் (7) பும்ரா வீசிய பந்தில் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார்.
பிற்பாதியில் அதிரடியில் இறங்கிய அவர், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 42 பந்துகளில் 74 ரன்களைக் குவித்தார். இதனால் 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து கொல்கத்தா அணி 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
மும்பை அணி பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்த பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.