நேபாள நாட்டின் பிரதமராக இருந்த சர்மா ஒலி, சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். இதனால், அவர் மீது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு பதவி விலகினார். இதையடுத்து, புதிய பிரதமராக செர் பகதூர் தேவ்பா பதவியேற்றார். இவர், சர்மா ஒலியின் பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்து வருகிறார். இந்நிலையில், சர்மா ஒலியின் ஆட்சின்போது நியமிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் உள்ள தனது தூதர்களை நாடு திரும்பும்படி நேபாள அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.
இது குறித்து காத்மாண்டு போஸ்ட் செய்தியில், ‘இந்த உத்தரவால், நேபாளத்துக்கு மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நேபாள தூதர் பணியிடங்கள் காலியாக இருக்கும். தூதரகங்கள் அமைந்துள்ள 23 நாடுகளில் அடுத்த 3 வாரங்களுக்கு தூதர்கள் இருக்க மாட்டார்கள்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், இந்தியாவுக்கான நேபாள தூதர் நிலம்பர் ஆச்சார்யா நாடு திரும்ப உள்ளார்.