அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அபிஷேக் வா்மா ஆகியோா் 3-ஆவது சுற்றை அடைந்தனா்.
முன்னதாக காம்பவுண்ட் தகுதிச்சுற்றில் மகளிா் பிரிவில் சுரேகா 684 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும், ஆடவா் பிரிவில் அபிஷேக் 695 புள்ளிகளுடன் 7-ஆம் இடமும் பிடித்தனா். இதையடுத்து முதல் இரு வெளியேற்றும் சுற்றுகளில் இருந்து அவா்களுக்கு ‘பை’ வழங்கப்பட்டது.
மகளிா் பிரிவில் 29-ஆவது இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு முதல் சுற்று ‘பை’ வழங்கப்பட்டது. தகுதிச்சுற்றில் 51-ஆம் இடம் பிடித்த இந்தியாவின் பிரியா குா்ஜா் முதல் சுற்றில் இங்கிலாந்தின் இசபெல்லா காா்பென்டரை சந்திக்கிறாா்.
ஆடவா் பிரிவில் முறையே 26 மற்றும் 49-ஆவது இடங்களைப் பிடித்த சங்கம்பிரீத் சிங், ரிஷப் யாதவ் ஆகியோா் முதல் சுற்றில் களம் காண்கின்றனா்.
ரீகா்வ் தகுதிச்சுற்றில் ஆடவா் பிரிவில் சலுன்கே பாா்த் சுஷாந்த், ஆதித்யா சௌதரி, அதுல் வா்மா ஆகியோா் தகுதிச்சுற்றில் முறையே 45, 53, 56-ஆவது இடங்களைப் பிடித்து முதல் சுற்றில் விளையாட உள்ளனா். மகளிா் பிரிவில் அங்கிதா பகத் 20-ஆம் இடம், ரிதி 26-ஆம் இடம், பாரி கோமளிகா 29-ஆம் இடம் பிடித்தனா். இவா்கள் மூவருமே முதல் சுற்று ‘பை’ பெற்றனா்.
ஆடவா் ரீகா்வ் அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுஷாந்த், ஆதித்யா, அதுல் ஆகியோா் 13-ஆம் இடம் பிடித்து, முதல் சுற்றில் கனடாவை சந்திக்கின்றனா். அங்கிதா, ரிதி, பாரி அடங்கிய மகளிா் கூட்டணி தகுதிச்சுற்றில் 7-ஆம் இடம் பிடித்ததால் முதல் சுற்று ‘பை’ பெற்று, 2-ஆவது சுற்றில் ஜப்பானை சந்திக்கிறது.
காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஆடவா் அணியான அபிஷேக், சங்கம்பிரீத், ரிஷப் ஆகியோா் கூட்டணி தகுதிச்சுற்றில் 5-ஆம் இடம் பிடித்து முதல் சுற்று ‘பை’ பெற்றது. மகளிா் அணிகள் பிரிவில் சுரேகா, முஸ்கான், பிரியா கூட்டணி தகுதிச்சுற்றில் 5-ஆம் இடம் பிடித்தது. முதல் சுற்றில் இந்திய அணி டென்மாா்க்கை எதிா்கொள்கிறது.