128
வியாழக்கிழமை மத்தியானம்
மூணாவது பாடவேளைதான்
நீதிபோதனை!
பசங்களுக்கெல்லாம் ஒரே
கொண்டாட்டமா இருக்கும்;
அப்போதான் கணக்கு
வாத்தியார் காதை திருகமாட்டாரு,
இங்கிலீசு வாத்தியாரு
இலக்கணம் கேட்கமாட்டாரு,
அறிவியல் வாத்தியாரு
கன்னத்துல அறைய மாட்டாரு!
வகுப்புலீடர் கோவிஞ்சாமிகூட
“மிகமிக அடங்கவில்லைனு”
பேர் எழுத மாட்டான்!
எழுதுன பேரும்
செல்லாது!
களம்பூரு காளி
வாத்தியார்தான் நீதிபோதனைக்கும் வருவாரு
இவரு ட்ராயிங் மாஸ்டரும்கூட;
அருணகிரி வரையுற
ஓவியத்துக்கு மட்டும்தான்
பத்துக்கு பத்து போடுவாரு!
எங்களுக்கெல்லாம்
ஒம்போது ஒம்பதரை
தாண்டமாட்டாரு!
பாட்டுப்பாடறதும்
கதை சொல்றதுக்கும்தான்
அந்த பாடவேளை!
பொண்ணுங்களுக்கும்
பசங்களுக்கும் கண்டிப்பா
போட்டி வைப்பாங்க!
மத்தியானம் வீட்ல
சாப்புட்டு வரும்போதே
அண்ணன் ஒளிச்சுவச்சிட்டு
போற பாட்டுபுத்தகத்தை
தெரியாம எடுத்துட்டு
வந்துருவோம்;
சிலநேரம் அரசமரத்தாண்ட
இருபத்திஞ்சி பைசாக்கு
வித்துட்டு இருப்பாங்க!
பசங்கலாம் பாட்டுபுத்தகத்தை
வாங்குறாங்களோ இல்லையோ
சுத்திநின்னு வேடிக்கையாச்சும்
பார்ப்போம்;
“கரகாட்டக்காரன்”
“சின்னத்தம்பி’
“அம்மன் கோயில் கிழக்காலே”
“சகலகலா வல்லவன்”
“மனிதன்”
எம்ஜியாரின் காதல்
பாடல்கள்!
இப்படி மனசுக்கு புடிச்ச
எல்லா புத்தகத்தையும்
வாங்குவோம்!
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர்
உடமையடா” இது அருணகிரி;
“சின்னத்தங்கம் என்
செல்லத்தங்கம் ஏன் கண்ணு
கலங்குது” இது அரும்பலூரு
தேவி!
எப்படியும் பசங்கதான்
ஜெயிப்போம்னு நெனைக்கும்போது
“வசந்தகாலங்கள் இசைந்து
பாடுங்கள்!
புதுவிதமான நதிதனில்
நீங்கள் அசைந்து அசைந்து
ஆடுங்கள்” என
பாடலோடு சேர்ந்து
ஆட்டமும் ஆடி எங்கள்
வெற்றிக்கனவை
சிதைத்திருப்பாள்
அதோ ஷாகிதா என்னும்
அழகு தேவதை!
இப்படி ஒவ்வொரு முறையும்
அந்த பாடவேளையின்
இறுதியில் எங்களுக்கு
தோல்விகளையே
பரிசலித்திருப்பாள்!
“காக்காவெட்டி சூரன் கதை”
சொல்லும் கிருஷ்ணன்
“குள்ளமனுசன்” கதை
சொல்லும் பட்டாபி
“விக்கிரமாதித்தன் கதை”
சொல்லும் காளி வாத்தியார்
இப்படி பாடல்களோடும்
கதைகளோடும் கழிந்தது
அந்த மாலைநேர
பாடவேளைகள்!
அதோ அந்த வகுப்பறை
தாழ்வாரத்தை தாண்டிய
கண்ணுக்கெட்டும் தூரத்தின்
அந்த மலைஉச்சியில்
இன்னமும் அந்த
காக்காவெட்டி சூரன்களும்
குள்ளமனுசன்களும்
விக்கிரமாதித்தன்களும்
இதோ இன்னமும் எங்கள்
நெஞ்சங்களில்!
இப்போதெல்லாம் எங்கள்
பள்ளிக்கூடங்களின்
வகுப்பறைகளும்
தாழ்வாரங்களும்
சுற்றுச்சுவற்றுக்குள்
சிறை வைக்கப்பட்டிருக்கின்றன!
சிறகுகள் பறக்க மறந்து
கணிணிக்குள்
புதைந்துபோனது!
வானம்பாடிகள் இப்போது
ஊமைகளாய்!
மீண்டும் துளிர்க்கும்
இன்னுமோர் வசந்தகாலம்
அதுவரை அசைபோடுவோம்
“பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித்திரிந்த பறவைகளே!”
-
நா.காமராசன்