முன்னாள் கர்நாடக முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கர்நாடக (Karnataka) முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா (Sadananda Gowda) இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது பொய்யான வீடியோ என மறுத்துள்ள சதானந்த கவுடா, தனக்கு இருக்கும் இமேஜை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இந்த போலி வீடியோவை திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாகவும் சாடியுள்ளார்.
இது குறித்து சதானந்த கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, நலம் விரும்பிகளே, நான் இருப்பது போன்ற மார்பிக் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோ எனது இமேஜை டேமெஜ் செய்ய எனது எதிரிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளேன். தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்வதும், மற்றவர்கள் அனுப்பும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளனர்.
கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சதானந்த கவுடா ஆவார். கடந்த 2011 முதல் 2012 வரை கர்நாடக மாநில முதல்வராக சதானந்த கவுடா இருந்துள்ளார். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ரயில்வே தொடங்கி சட்டத்துறை என பல்வேறு முக்கிய அமைச்சர் பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் சதானந்த கவுடா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது கர்நாடக பாஜகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான 69 வயதாகும் சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ நேற்று மாலை இணையத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.