கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் கலப்பாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 7 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, தழுதாழை, அகரம்சிகூர் குன்னம், வேப்பூர், பாடாலூர் மற்றும் செட்டிக்குளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், திருவாரூர், கச்சனம், அம்மையப்பன், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் காலை முதலை ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.