ஆஸ்திரேலியா, பிரிட்டனுடன் தாங்கள் அமைத்துள்ள முத்தரப்புக் கூட்டணி (ஆகஸ்) எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட கூட்டணி எந்தவொரு தனி நாட்டையும் இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டதல்ல. இது, அமெரிக்காவின் நலன்களைக் கருதியும் சா்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட கூட்டணியாகும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை மற்றும் அமைதியை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைப் போலவே, பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் சா்வதேச எல்லைகளை நீண்ட காலமாக மதித்து வருகிறது. எனவே, இந்த 3 நாடுகளும் இணைந்து இந்தோ-பசிபிக் பிராந்தி அமைதியைப் பாதுகாப்பதில் இணைந்து செயல்படவுள்ளோம்.
சீனாவைப் பொருத்தவரை, அந்த நாட்டுடனான ஆரோக்கியமான போட்டியை வரவேற்கிறோம். ஆனால், சீனாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை. சில நாள்களுக்கு முன்னா்தான் சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் இதுகுறித்து பேசினோம். மோதலைத் தவிா்ப்பதற்காக, இனியும் இருதரப்பு உயா்நிலைப் பேச்சுவாா்த்தை தொடரும் என்றாா் அவா்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியை அமைத்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.
இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்களது நலன்களைப் பாதுகாக்கவும், அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை ஆஸ்திரேலியா பெற உதவுவதற்கும் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
கனிம வளங்கள் நிறைந்த தென்சீனக் கடல் பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மலேசியா, புருணை, பிலிப்பின்ஸ், தைவான், வியத்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரும் அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் விதமாக அங்கு சீனா செயற்கைத் தீவுகளை அமைத்தும் ஏற்கெனவே உள்ள தீவுகளில் ராணுவ மையங்கள் அமைத்தும் உள்ளது.
எனினும், சா்வதேச கடல் வா்த்தகத்தின் முக்கிய பாதையாகத் திகழும் இந்தப் பகுதியை சா்வதேச நாடுகள் தங்களது வழித்தடமாகப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தென்சீனக் கடல் வழியாக தங்களது போா்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளது இநத்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பது சா்ச்சையை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் கூட்டாளியான பிரான்ஸே இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீனிவெஸ் லீ டிரையான் கூறுகையில், ஆகஸ் கூட்டணியை அமைத்ததன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது முதுகில் குத்தியுள்ளதாக சாடினாா்.
இந்தக் கூட்டணியில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து அவா் அதிருப்தி தெரிவித்தாா்.