தமிழகம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் விசாரணை செப்.24-க்கு தள்ளிவைப்பு

57views

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் விசாரணையை செப்.24-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப்பதிவு செய்வதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர். இதனால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்து வருகிறது.

ராஜேந்திரபாலாஜி தரப்பில், ”உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டால், அந்த வழக்கை 2-க்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். 3-வது நபராக தனி நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிடப்பட்டது.

முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல்கான், ”உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு செப்.20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை செப்.24-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!